தமிழ்மணம் ஈழம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : September 21, 2017, 4:00 pm
சமர்ப்பணம்
இறுதிப் போர் என சிறீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டு நடந்த ஈழப் போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். விமானத்தாக்குதல், ஆர்ட்டிலரி, செல் என பலவகையான கனரக ஆயுதங்களுக்கு பலியான தமிழர்களுக்கு தமிழ்மணம் தனது அஞ்சலியை செலுத்துகிறது. இந்த ’தமி்ழ்மணம் ஈழம்’ தளம் போரில் பலியான மக்களுக்கும், போராளி்களுக்கும் சமர்பிக்கப்படுகிறது
தொடரப் போகும் ஈழத்தின் அரசியல் போராட்டத்தை இந்த தளம் பதிவு செய்யும்
 
இனப்படுகொலை
 
சமீபத்தில் எழுதப்பட்ட ஈழம் சார்ந்த இடுகைகள்


...மேலும் வாசிக்க
     இலங்கையின் வரலாறு, கடந்த நூற்றாண்டின் இறுதியிலும், இந் நூற்றாண்டின் ஆரம்பத்திலுமாக, கறை படிந்திருக்கிறது. அதை மாற்ற இயலாது. இன ஒற்றுமையையும், போரின்றிய உலகையும் வேண்டிப் பிரார்த்திக்கும் நல்ல உள்ளங்கள் எல்லா இனத்தவர்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார்கள். எமது பார்வைகள் எப்போதும், எல்லாவற்றையும், எல்லோரையும் சந்தேகத்துடனே பார்க்கப் பழக்கப்பட்டுப் போயிருப்பதால், நல்லவர்களைக் கூட சந்தேகத்துடனேயே மிக எளிதாகக் கடந்து சென்று விடுகிறோம்.
      போரானது, இலங்கையிலுள்ள அனைத்து இனங்களையுமே பாதிப்புக்குள்ளாக்கித்தான் ஓய்ந்தது. அதன் வீரியம் ஓய்ந்து விடாமல், அதன் தணல் அணைந்து விடாமல் காப்பதை இன்றைய அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு தூபமிட இந்திய தமிழ் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எனச் சிலரும் இருக்கிறார்கள் என்பது கவலை கொள்ளத்தக்க விடயமாகும்.
      யுத்தம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளில் பிரிவுதான் மிகவும் மோசமானது. அது மனிதனுக்கென இருக்கும் அனைத்து உரிமைகளையும் இல்லாமல் செய்து விடுகிறது. ஒருவரையொருவர் பிரித்து விடுகிறது. அப் பிரிவு, ஒருவர் எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருப்பினும், அவரைப் பாதித்து விடுகிறது. அப் பாதிப்பு, அவருக்குள்ளிருந்து வேறு வடிவத்தில் வெளியாகிறது. அது கவிதைகளாக, ஓவியங்களாக, இலக்கியப் படைப்புக்களாக மாற்றம் பெறுகிறது.
      அவ்வாறான சூழ்நிலையில் எழுதப்பட்ட சிங்கள மொழிக் கவிதையொன்றைக் கீழே தருகிறேன். கவிதையை எழுதியிருக்கிறார் கவிஞர் ரொஷான் தேல பண்டார.
கறுப்பு நீர்த் தடாகம்
கறுப்பு நீர்த் தடாகத்தினருகே ஓர் அந்திவேளை
இருண்ட மேகங்கள் வந்து மெதுவாகத் தரித்து நிற்கும்
மயான அமைதியை இன்னுமின்னும் அதிகரித்தபடி
அல்லிப் பூக்களின் இதழ்கள் ஒவ்வொன்றாக உதிரும்
இதயம் நொறுங்குமளவிற்கு அரளிமரத்தின்
வெள்ளைப் பூக்கள் வாடிச் சருகாகி காற்றில் மிதக்கும்
வீட்டு முற்றத்தின் எல்லைக்கு தனிமை வந்து
உஷ்ண நீர்த்துளிகளை எனதிரு விழிகளிலும் சுரக்க வைக்கும்
முன்பொரு நாள் நாம் வருகை தந்த போது புன்னகைத்த
காவற்கல் கூட இன்று முகம் திருப்பிக் கொள்கிறது எனில்
எமது நேச வரலாற்றை இந் நிலமறியக் கூடும்
அந்தளவு மயானத் தனிமை அதையும் ஆளக் கூடும்
****
      கவிஞர் ரொஷான் தேல பண்டார, சிங்கள மொழியில் கவிதை எழுதி வந்தாலும் கூட தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பரிச்சயம் கொண்டவர். இலங்கையில் அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு ஓவியரும் கூட. யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் பணி புரிய நேர்ந்ததன் காரணமாக, இவரது கவிதைகள் மற்றும் ஓவியங்கள் யுத்தத்தின் பிரதிபலிப்பையே அதிகம் சித்தரிக்கின்றன.
      மனிதர்களைத் தின்று கொழுத்த யுத்தங்களின் வரலாறும், அவை கற்றுத் தரும் படிப்பினைகளும்ஏராளம். மேலேயுள்ள கவிதையிலுள்ள குறியீடுகள், இலங்கையில் போரானது, யுத்தம் நடந்த பிரதேசத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ள தனிமையை, இழப்பை விரிவாகச் சொல்கின்றன.
      இங்கு ‘கறுப்பு நீர்த் தடாகத்தினருகே’ எனும் சொல்லாடல், அந்தி நேரங்களில் மேகங்கள் மட்டுமே வந்து செல்லும் இஸ்லாமியப் பள்ளிவாயல்களையும், அல்லிப் பூக்கள், மயான அமைதியோடு இருக்கும் கோயில்களையும், அரளி மரம், யாரும் வராமல் பூஜைக்குரிய பூக்கள் சருகாகிக் கிடக்கும் பௌத்த விகாரையையும் குறிக்கிறது எனக் கொண்டு, இக் கவிதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள். போரின், அது கொண்டு வந்து சேர்த்த மயான அமைதியின், தனிமையின் மோசமான சித்திரவதையை கவிதை எடுத்துரைக்கும்.
- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்
 
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 04 இங்கே அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 05 இங்கே 

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க